20 மாதங்களுக்கு பிறகு கர்தார்பூர் சிறப்பு பாதை திறக்கப்பட்டது...பஞ்சாப் முதல்வர் குரு நானக் தேவின் நினைவிடத்தில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்!!

புதுடெல்லி: சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் கர்தார்பூரில் தனது கடைசி நாட்களை கழித்தாக கூறப்படுகின்றது. அவரது நினைவாக அங்கு தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவிற்கு சென்று பிரார்த்திப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாக கருதப்படுகின்றது. பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் குருத்வாராவிற்கு செல்லும் வழித்தடமானது கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘பிரதமர் மோடி அரசு 17ம் தேதி (இன்று) முதல் கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறக்கிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் நகரில் இருந்து சர்வதேச எல்லை திறக்கப்பட்டு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக 20 மாதங்களாக குருதாஸ்பூரில் மூடப்பட்டு இருந்த சர்வதேச எல்லை தற்போது திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட அமைச்சர்கள் குரு நானக் தேவின் நினைவிடத்தில் நாளை வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: