×

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் பெரிய ஏரி நிரம்பி வீணாக வெளியேறும் தண்ணீர்: சேமிக்க முடியாமல் விவசாயிகள் வேதனை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரி, தொடர்ந்து பெய்த கனமழையால், முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனை தடுக்க முடியாமல், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கடம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, பொது பணி துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 250 ஏக்கரில் நெல், நிலக்கடலை, தர்பூசணி உள்ளிட்டவை ஆண்டுக்கு 2 போகம் விவசாயம் மட்டுமே செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில், இந்த ஏரியில் தூர்வாரும் பணிகள் நடந்தன.ஆனால், முறையாக ஆழப்படுத்தவும், கரைகள் மற்றும் மதகுகளை முறையாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், இந்தாண்டு பருவ மழைக்கு முன்னதாக ஏரிகள், கால்வாய்களை தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியது. ஆனாலும், கடம்பாடி ஏரியை தூர்வார அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கடம்பாடி ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதுபோல் வெளியேறும் தண்ணீர் கடம்பாடி - திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதையொட்டி, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல், சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது.

தற்போது, ஏரி நிரம்பி தண்ணீர் முழுமையாக இருப்பதன் மூலம் விவாசயம் செய்து வரும் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரு புறம் ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை, பாதுகாக்க முடியவில்லை என வேதனை அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஏரியை ஆழப்படுத்தி வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mamallapuram ,Kadambadi , Mamallapuram, Kadambadi, Big Lake, overflowing
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...