×

கொரோனோவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ₹3 லட்சம் என 76 குழந்தைகளுக்கு  நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு, ₹2.28 கோடியில் நிவாரண உதவித் தொகை வழங்கினார்.

மேலும், 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை, மதுராந்தகம் பகுதியை சேர்ந்த 6 விவசாயிகளுக்கு  இலவச மின் இணைப்பு, மேலக்கோட்டையூரை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு தலா 441 சதுரஅடி கொண்ட இலவச வீட்டுமனை பட்டா, முதல்வர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர், கொரோனா காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் எஸ்ஆர்எம், இந்துமிஷன், பார்வதி மருத்துவமனை, மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 8 தனியார் மருத்துவமனைகளுக்கு சிறந்த மருத்துவமனைக்கான சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனாவால் பெற்றொரை இழந்த குழந்தைகளுக்கு தலா ₹3 லட்சம் நிவாரண தொகை வழங்கியதோடு,  அவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான முழு செலவையும், அந்தந்த மாவட்ட நிர்வாகமே ஏற்றுகொள்ளும். நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
மேலும் விடுபட்ட இருளர் இன மக்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார். இதில் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்டக்குழு உறுப்பினர் செம்பருத்தி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தர் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

92 பேருக்கு இலவச பட்டா
காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகாவில் காட்டரம்பாக்கம், சிவந்தாங்கள், பெரும்புதூர் ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் 81 பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும், வளர்புரம் கிராமத்தில் இதர வகுப்பை சேர்ந்த 11 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு காட்ராம்பாக்கம் பகுதியில் அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்த 92 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா காட்டரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட குழு தலைவர் மனோகரன், பெரும்புதூர் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் பாலா, ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ செல்வபெருந்தகை கலந்து கொண்டு 92 குடும்பத்தினருக்கு ₹2.16 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இதில், பெரும்புதூர் ஆர்டிஓ சைலேந்திரபாபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், ஜார்ஜ், செந்தில் தேவராஜ், சந்தவேலூர் சத்யா, இலக்கிய அணி ஒன்றிய அமைப்பாளர் ஜெகன்குமார், பால்நல்லூர் ஊராட்சி தலைவர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corono ,Minister ,Thamo ,Anbarasan , Corono, parents, child, Anbarason
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...