அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பூண்டி நீர்த்தேக்கத்தில் 7 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

திருவள்ளூர்: அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று மாலை 7 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆந்திரம் மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல், நேற்று அதிகாலை வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் நள்ளிரவில் பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடியும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் நேற்று மாலை நிலவரப்படி 33.80 அடி உயரமும், 2815 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேலும், நீர்த்தேக்கத்துக்கான நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது.  இதையொட்டி, அணையின் பாதுகாப்பு கருதி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுபடி நேற்று 6 ஆயிரம் கன அடியிலிருந்து, வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: