நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடம் மாற்ற அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என கடந்த 2011ல் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள், நில உரிமையாளர்கள் ஆகியோர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், முதலில் இடைக்கால தடை விதித்தாலும், கடந்த 2020 அக்டோபர் 14ல் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையே மீண்டும் உறுதி செய்து யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நீலகிரியில் யானை வழித்தடத்தில் இருந்த ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், வீடுகள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட்டன. மேலும் இதுகுறித்து கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடியும் வரை மாவட்ட ஆட்சியரை எங்களது உத்தரவு இல்லாமல் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த்து. இந்நிலையில்  தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், யானை வழித்தடம் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக ரீதியாக பல்வேறு செயல்பாடுகள் அரசு தரப்பில் மேற்கொள்ள உள்ளதால் மாவட்ட ஆட்சியரை மாற்ற அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: