காரைக்குடி அழகு நிலையத்தில் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை: போக்சோவில் 4 பேர் கைது

காரைக்குடி: பள்ளி மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். டார்ஜிலிங்கை சேர்ந்த அழகு நிலைய பொறுப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த டிரைவர் ஒருவரின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், தன்னுடன் படிக்கும் மாணவியின் தாய் பணியாற்றும் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் அழகு நிலைய பொறுப்பாளரான மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மன்ஸிலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மன்ஸில், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சினிமாவுக்கு அழைத்து செல்வது மற்றும் மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் இருந்த மாணவியை, தேவகோட்டையை சேர்ந்த விக்னேஷ் (28) தனது டூவீலரில் அழைத்து சென்றுள்ளார். மாணவியுடன் மன்ஸில் மற்றும் உடன் படிக்கும் மாணவி மற்றும் அவரது காதலர் ஆகியோர் சினிமாவிற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிந்தவுடன் அவர்கள் விசாரணை செய்து மாணவி மற்றும் அழகுநிலையத்துக்கு அழைத்து சென்ற மாணவிக்கு டிசி கொடுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரையும் பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவத்துவங்கியது.

அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மன்ஸில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மன்ஸில் (33), தேவகோட்டையை சேர்ந்த விக்னேஷ் (28), காரைக்குடியை சேர்ந்த லட்சுமி (45), உடந்தையாக இருந்த அறந்தாங்கியை சேர்ந்த சிரஞ்சீவி (25) மற்றும் உடன் படித்த பள்ளி மாணவி என 5 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மன்ஸில் தவிர 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: