முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதால் தீவிரம் மாஜி முதல்வர் எடப்பாடி பிஏவை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு: கோவை, ஈரோடு பகுதிகளில் தேடுதல் வேட்டை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிஏ ஆவார். இவர் மீது கடந்த செப்டம்பர் மாதம், செம்மாண்டபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வக்குமார், தனக்கு தெரிந்த நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ₹1.37 கோடி மோசடி செய்துவிட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28), சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஜினியரான தனக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ₹17 லட்சத்தை எடப்பாடி பழனிசாமியின் பிஏ மணி, அதிமுக பிரமுகர் செல்வகுமார் ஆகியோர் பெற்றனர். ஆனால், வேலை வாங்கித்தரவில்லை.

₹4 லட்சத்தை மட்டும் திரும்ப தந்துவிட்டு, மீதி பணத்தை மோசடி செய்துவிட்டனர் எனக்கூறியிருந்தார். இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் விசாரணை நடத்தி, மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிஏ நடுப்பட்டி மணி, செல்வகுமார் ஆகிய 2 பேர் மீதும் கூட்டுசதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவர்களை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இருவரும் சேலம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானது. உடனே நடுப்பட்டி மணி, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள், நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் எடப்பாடி பிஏ மணி, செல்வக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்ய டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படை போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More