பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்றுவரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். பண மதிப்பு நீக்கம் - இந்திய நாணய பரிசோதனை குறித்த பார்வை புத்தகம் வெளியீட்டு நிகழ்வு சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொருளாதார அறிஞரும் மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசியதாவது: பண மதிப்பிழப்பு அமல் மற்றும் அதன் விளைவுகள் பற்றி மிக விரிவாக இந்த புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வந்தவுடன் பலரும் பல்வேறு ஆதரவு கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட பொருளாதார நிபுணர் கிடையாது. கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற முடிவு பொருளாதார முடிவல்ல. முழுக்க முழுக்க அரசியல் முடிவு. இது மாபெரும் தவறான முடிவு. சாமானியர்களும், சாமானிய மக்களும் பணமதிப்பு நீக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறோம், டிஜிட்டல் கரன்சி முறை கொண்டு வரப் போகிறோம் என்று தினந்தோறும் புதுபுது காரணங்களை ஒன்றிய அரசு கூறியது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஒரு சிலருக்கு ஏற்றாற்போல் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்தனர். அரசின் கொள்கைகளை கேள்வி கேட்பவர்கள், விமர்சிப்பவர்கள் இருக்கக் கூடாது என்று பல்வேறு முடிவுகள் பணமதிப்பிழப்பு காலத்தில் எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறான முன்னுதாரணம். ஒன்றிய அரசு எடுத்த முடிவால் 5 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  பொதுமக்கள் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எடுக்க கூடாது என எந்த சட்டத்தில் இருக்கிறது என்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. மேலும் வரி வசூல் தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: