×

₹22,500 கோடி செலவில் உ.பி சுல்தான்பூரில் 341 கிமீ அதிவிரைவுச்சாலை திறப்பு: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப்பிரேதச மாநிலம் சுல்தான்பூரில் 341 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட பூர்வாஞ்சல் அதிவிரைவுச் சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் பங்கேற்க அவர் ராணுவ விமானம் மூலமாக அதிவிரைவுச் சாலையில் வந்திறங்கினார். விரைவுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள விமான ஓடுபாதை பகுதியில் விமானப்படை விமானங்கள் தரையிறங்கி அசத்தின. உத்தரப்பிரேதச மாநிலத்தின் லக்னோ-காஜிபூரை இணைக்கும் விதமாக சுல்தான்பூரில் 341 கிமீ தூரத்திற்கு பூர்வாஞ்சல் அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டில் ரூ.22,500 கோடி செலவில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் 3.2 கிமீ தூரத்திற்கு அவசர காலங்களில் போர் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் விமான ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து பேசியதாவது, ‘யோகி ஆதித்யநாத்துக்கு முந்தைய உபி அரசாங்கங்கள் இம்மாநில மக்களுக்கு அநீதி இழைத்தன. அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தனர். நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியை போல, சீரான வளர்ச்சியும் முக்கியம்.  நாட்டின் செழிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம்’. இவ்வாறு அவர் பேசினார்.

எல்லாம் வாய்ஜாலம்
உபியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த விரைவுச் சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது தேர்தலில் ஆதாயம் பெறும் முயற்சி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா ஊடரங்கு காலத்தில், லட்சக்கணக்கான உபி தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து நடந்தே தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்தனர். பஸ் வசதியை கூட பாஜ அரசு செய்து தரவில்லை. ஆனால் மோடி, அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேர்க்க மட்டும் உபி அரசு மக்கள் வரிப்பணத்தை எடுத்து தாராளமாக செலவு செய்கிறது. பாஜவின் வாய்ஜால அரசியலை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்’’ என கூறி உள்ளார்.

Tags : UP Sultanpur ,Modi , ,500 22,500 crore, cost, opening of expressway at UP Sultanpur
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...