×

காஷ்மீரில் வெளிநாட்டு தீவிரவாதி உட்பட 4 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் வெளிநாட்டு தீவிரவாதி, அவனது உள்ளூர் கூட்டாளி ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் கட்டிட உரிமையாளர் உட்பட இரண்டு  பேரும் அப்போது உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின்  ஹைதர்போரா விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து சுதாரித்த வீரர்கள்  தீவிரவாதிகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதில் வெளிநாட்டு தீவிரவாதி மற்றும் அவனது உள்ளூர் கூட்டாளியும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதி டிஆர்எப் அமைப்பை  சேர்ந்த ஹைதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனது கூட்டாளி முதாசீர் கல், சமீபத்தில் ஜமலதாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தின்போது அங்கிருந்து ஹைதரை அழைத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. என்கவுன்டரில் கொல்லப்பட்ட மற்றொரு நபர் பனிஹாலை சேர்ந்த அமிர். இவன் ஹைதரின் கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் தீவிரவாதி. இவன் முதாசீர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்துள்ளான். இதனிடையே என்கவுன்டரின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து கட்டிட உரிமையாளர் அல்டாப் அகமத் உயிரிழந்துள்ளார். இவர் வீரர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாரா அல்லது தீவிரவாதிகள் சுட்டதில் உயிரிழந்தாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜ வலியுறுத்தல்
ஜம்முவில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி உள்ளது.  ஜம்மு காஷ்மீர் பாஜ செய்தி தொடர்பாளர் கிர்தாரி லால் ரெய்னா துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கொல்வதாகவும், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags : Kashmir , In Kashmir, militant, 4 killed
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...