டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் முகுருசா-படோசா

குவாதலஜாரா: மெக்சிகோவில் நடக்கும் டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடரின் முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீராங்கனைகள் படோசா - முகுருசா மோதுகின்றனர்.  சீசன் முடிவு உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மோதும்  டபுள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டி மெக்சிகோவின்   குவாதலஜாரா நகரில்  நடந்து வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்கள் நடந்தன. டியோடிஹுவகான் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த அனெட் கோன்டவெய்ட் (எஸ்டோனியா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்) இருவரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

சிச்சென்-இட்சா பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் சபலென்காவுடன் (பெலாரஸ்) மோதிய மரியா சாக்கரி (கிரீஸ்) 7-6 (7-1), 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 47 நிமிடம் போராடி வென்றார். ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதிய இகா ஸ்வியாடெக் (போலந்து) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ஆறுதல் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த படோசா, சாக்கரி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில்  ஸ்பெயின் வீராங்கனைகள் படோசா - முகுருசா மோதுகின்றனர். 2வது அரையிறுதியில் கோன்டவெய்ட் - சாக்கரி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Related Stories: