நியூசிலாந்துடன் டி20 தொடர் உலக கோப்பை தோல்விகளுக்கு பதிலடி தருமா இந்தியா?: ஜெய்பூரில் இன்று பலப்பரீட்சை

ஜெய்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஜெய்பூரில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. அமீரகத்தில்  நடந்த டி20 உலக கோப்பை தொடரின் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற நியூசிலாந்து  2வது இடத்தை பிடித்தது. எனினும், 2019ல் ஒருநாள் உலக கோப்பை, இந்த ஆண்டு டெஸ்ட் மற்றும்  டி20 உலக கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக பைனலுக்கு முன்னேறிய சாதனையை நியூசிலாந்து படைத்தது. அவற்றில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மட்டும் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.  அதுமட்டுமல்ல, டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்திலும் இந்தியாவை  வென்று  நமது அரையிறுதி கனவை  கலைத்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பை முடிந்து 3 நாளில்  இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நியூசிலாந்து  3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடரின் முதல் ஆட்டம்  இன்று ஜெய்பூரிலும், 2வது ஆட்டம் நவ.19ம் தேதி ராஞ்சியிலும்,  3வது ஆட்டம் நவ.21ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறும்.

முதல் டெஸ்ட்  நவ.25ம் தேதி கான்பூரிலும்,  2வது டெஸ்ட் டிச.3ல் மும்பையிலும் தொடங்க உள்ளன. டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி விலகியுள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா தலைமையேற்கிறார். ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் பட்டாளத்துடன் களமிறங்கும் இந்தியா, உலக கோப்பை தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நியூசிலாந்து அணியிலும் கேப்டன் கேன் வில்லியம்சன், போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்  டிம் சவுத்தீ தலைமையில் களமிறங்க உள்ள நியூசி. அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாகவே உள்ளது.

மொத்தத்தில், சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஆர்.அஷ்வின், ஆவேஷ் கான், யஜ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷண், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சூரியகுமார் யாதவ். நியூசிலாந்து: டிம் சவுத்தீ (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், லோக்கி பெர்குசன், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி.

நேருக்கு நேர்...

சர்வதேச ஆட்டங்களில் 2007ம் ஆண்டு முதல் இந்தியா - நியூசி. அணிகள் இதுவரை 7 டி20 தொடர்களில் மோதியுள்ளன. அவற்றில் தலா 3 தொடர்களை இரு அணிகளும் கைப்பற்றி சமநிலை வகிக்கின்றன. இந்த அணிகள் பங்கேற்ற ஒரு முத்தரப்பு தொடரை வேறு நாடு வென்றது.

இந்த 7 தொடர்கள் , உலக கோப்பை தொடர் என மொத்தம் 18 டி20 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளதில் இந்தியா 8 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 9 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. அதிகபட்சமாக நியூசிலாந்து 219 ரன், இந்தியா 208 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக இந்தியா 67 ரன்னிலும், நியூசி. 61 ரன்னிலும் சுருண்டுள்ளன.

Related Stories:

More