×

இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கூடுதல் உபரிநீர் திறப்பு: பாதுகாப்பு கருதி நீர்வளத்துறை நடவடிக்கை

சென்னை: இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உட்பட 3 ஏரிகளில் பாதுகாப்பு கருதி கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த 6ம் தேதி இரவு முதல் கடந்த 11ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பின.

குறிப்பாக, நேற்று காலை 6 மணி நிலவரப்படி 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 33.97 அடி வரை நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 16.86 அடி உள்ளது. 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 19.22 அடி வரை நீர் இருப்பு உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.55 கன அடி நீர் இருப்பு உள்ளது. அதே போன்று 36.61 அடி கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில் 36.61 அடி நீர் இருப்பு உள்ளது.இந்நிலையில், வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் இன்றும், நாளையும்  மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த ஏரிகளின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3 அடி வரையும், மற்ற ஏரிகளில் 2 அடி வரையும் நீர் இருப்பை குறைவாக வைத்திருக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.எனவே, நேற்று காலை 11 மணியளவில் புழல் ஏரியில் இருந்து 5000 கன அடி உபரி நீருக்கு பதிலாக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கத்தில் 250 கன அடி நீருக்கு பதிலாக 1000 கனஅடியாகவும், பூண்டி ஏரியில் 6 ஆயிரம் கன அடி நீருக்கு பதிலாக  7 ஆயிரம் கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது.

நேற்று காலை 11 மணி நிலரப்படி பூண்டி ஏரி 34 அடியாகவும், புழல் ஏரி, 19.20 அடியாகவும், செம்பரம்பாக்கம் 22 அடியாக இருந்தது. இந்த ஏரியின் நீர் இருப்பை குறைத்து வைத்தால் மட்டுமே வினாடிக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி வரை நீர் வரத்து இருந்தால் கூட, ஏரியில் இருந்து அந்த நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம், ஏரிக்கும், பொதுமக்களுக்கும் எந்த வித பாதிப்பும் இருக்காது என்பதால், முன்கூட்டியே உபரி நீராக திறக்கப்பட்டு நீர் இருப்பு குறைக்கப்பட்டு வருகிறது.

Tags : Poondi ,Puhal ,Sembarambakkam , Extreme levels of flood danger were announced in Poondi, Puhal and Sembarambakkam lakes today and tomorrow.
× RELATED 10 நாட்கள் குடிநீரின்றி தவிப்பு; காலி...