3வது மாடியிலிருந்து விழுந்து பலி மாணவியின் கண், தோல் தானம்: சென்னையில் சோகம்

சென்னை: வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த 6ம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் சிறுமியின் கண்கள் மற்றும் தோல் தானம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி கமலாதேவி. 11 வயது மகள் ஹரிணியுடன் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். மனைவி எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். மகள் ஹரிணி அருகில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 31ம் தேதி ஹரிணி தனது வீட்டின் 3வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரிணியை மீட்டு அவரது பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரிணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின்படி பாண்டி பஜார் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே உயிரிழந்த மகள் ஹரிணியின் உடல் உறுப்பை அரசுக்கு தானம் செய்ய அவரது பெற்றோர் அருண் மற்றும் கமலாதேவி முடிவு செய்தனர். அதன்படி தனது மகளின் இரண்டு கண்கள் மற்றும் தோலை அரசுக்கு தானம் செய்தனர். மகளின் கண்கள் தானம்  செய்ததன் மூலம், மீண்டும் அந்த கண்கள் மூலம் அவரை பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என பெற்றோர் உருக்கமாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

Related Stories: