ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த முன்னாள் போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு மரணம்

சென்னை: தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு மாரடைப்பால் மரணமடைந்தார். சென்னை பெரவள்ளூர் சந்திரசேகரன் சாலை பகுதியை சேர்ந்தவர் நல்லம நாயுடு (83). இவர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகன், 2 மகள் உள்ளனர். மூத்த மகன் இளங்கோவன் தொழில் துறை இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 2வது மகன் சரவணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோருக்கு திருமணமாகி தனித்தனியாக  வசித்து வருகின்றனர்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெரவள்ளூர் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டில் நல்லம நாயுடு வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக உறவினர்கள் அவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் நல்லம நாயுடு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பெரவள்ளூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த நல்லம நாயுடு, 1961 பேட்ச் பிரிவை சேர்ந்தவர். லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியபோது, 1991-96ம் ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பணியாற்ற பல காவல்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டினர். அப்போது மிகவும் நேர்மையான காவல் அதிகாரி என பெயர் பெற்ற நல்லம நாயுடு விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 6 மாதத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு நல்லம நாயுடுவின் நேர்த்தியான புலன் விசாரணையும் சேகரித்த தடயங்களும், ஆவணங்களும் முக்கிய காரணங்கள் என காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பணி ஓய்வுக்கு பிறகு இந்த வழக்கின் விசாரணைக்காக 4 முறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தபோது, அதிமுக தரப்பால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் மறைமுகமாக பல தொல்லைகளும் நெருக்கடிகளும் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது, குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அதேபோல, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களையும் ‘என் கடமை. ஊழல் ஒழிக’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார். பணி ஓய்வு பெற்று பெரவள்ளூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். உயிரிழந்த நல்லம நாயுடுவின் உடல் நேற்று மாலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னதாக கொளத்தூர் பெரவள்ளூர் பகுதியில் உள்ள நல்லம நாயுடு வீட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, பி.கே.சேகர்பாபு மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

* நல்லம நாயுடு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்.பி.,யாகவும் இருந்து ஓய்வு பெற்ற நல்லம நாயுடு வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும், நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாக பணியாற்றியவர். ஊழல் வழக்குகளை குறிப்பாக அதிமுக ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்தவர்.

உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் “நீதி வென்றது” என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில்தான் “என் கடமை - ஊழல் ஒழிக” என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி - துறையில் தான் சந்தித்த சவால்கள், அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். கலைஞரால் விசாரணை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம நாயுடு மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்த சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories:

More