உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்தது. உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்  திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்கு பழைமைவாய்ந்த அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு மேலே வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் உள்ள இந்த அருவிக்கு கொட்டையாறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு உள்ளிட்ட சிற்றாறுகள் நீராதாரமாக உள்ளன.

மலையில் மேலுள்ள வனப்பகுதியில் மழை பெய்தால் இந்த சிற்றாறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு ஒன்றிணைந்து பஞ்சலிங்க அருவியில் விழுந்து பாலாறு வழியாக கோவில் வளாகத்தினை சூழ்ந்து திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று மதியத்திற்கு மேல் பெய்த கனமழையால், பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஆர்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கிருந்து பாலாற்றில் வரும் தண்ணீர் கோவில் வளாகத்தை சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு பணியில் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: