×

சபரிமலையில் மண்டல பூஜைகள் தொடங்கின; தரிசனத்துக்கு வந்த இளம் பெண்ணால் பரபரப்பு: கனமழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில், பழைய மேல்சாந்தி ஜெயராஜ்போற்றி நடையை திறந்தார். பின்னர் அடுத்த ஒரு வருடத்துக்கான புதிய மேல்சாந்திகள் பரமேஸ்வரன் நம்பூதிரி, சம்பு நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் இன்று காலை மண்டல கால பூஜைகள் தொடங்கின. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்தார். இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தொடங்கினர்.

அதிகாலை 1 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று முதல் தினமும் 30 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கனமழை காரணமாக 3 நாட்கள் மட்டும் குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் முன்பதிவு செய்தும் இந்த 3 நாட்களிலும் வரமுடியாத பக்தர்கள் வேறு நாட்களில் இதே முன்பதிவு டிக்கெட்டுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இளம்பெண்ணால் பரபரப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை ரத்து செய்ய கோரி இளம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு ஆர்எஸ்எஸ், இந்து ஐக்கிய வேதி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த ஆண்டு சென்னையில் உள்ள மனிதி அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான இளம்பெண்கள் தரிசனத்துக்கு சென்றனர். அப்போது சபரிமலையில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது. ஆனாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவை சேர்ந்த கனகதுர்க்கா, பிந்து அம்மினி ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். அதன்பின்னர் சபரிமலைக்கு இளம்பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செங்கனூர் ரயில் நிலையம் வந்த இளம்பெண், அங்கிருந்து பம்பை செல்லும் பஸ்சில் ஏறினார்.

அவர் தரிசனத்துக்கு செல்வதாக கூறியதால் பக்தர்கள் அவரை பஸ்சில் ஏறக்கூடாது என கூறினர். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற செங்கனூர் போலீசார் அந்த பெண்ணை பம்பை செல்ல அனுமதிக்காமல் பஸ் நிலையத்தில் கொண்டு விட்டனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த பெண் சபரிமலை செல்லாமல் திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் சென்றார். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசியதால் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் நேற்று செங்கனூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sabarimal , Zonal pujas began at Sabarimala; Excitement by the young woman who came for the darshan: Devotees gathered despite the heavy rain
× RELATED கேரள மாநிலத்தில் 7 இடங்களில்...