ஜம்மு - காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: வீட்டு உரிமையாளரும் பலி

காஷ்மீர்: ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீர் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தீவிரவாதிகள் ரஷீத் முசாபர் கனாய், நசீர் மிர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து பதுங்கியிருந்த ஹைதர்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். சரணடைய வாய்ப்பு கொடுக்கப்பட்டும், அவர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கையில் இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஜம்மு காஷ்மீரின் சோபூர் நகரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தின்போது அப்பகுதியை சேர்ந்த வீட்டு உரிமையாளர் அல்தாப் தார் என்பவர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த மாதத்தில் மட்டும் 11 புலம்பெயர்ந்தோர் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: