ஆவடி அருகே பரபரப்பு; லிப்ட் கேட்பதுபோல் நாடகமாடி வாலிபரிடம் பைக், மோதிரம் பறிப்பு: கூகுள் பே மூலம் 12,000 கையாடல்

ஆவடி: ஆவடி அருகே ஆயில்சேரி பகுதியில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து வாலிபரிடம் பைக், மோதிரத்தை பறித்த கும்பல், கூகுள் பே மூலம் 12 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டு தப்பினர். சென்னை குன்றத்தூர், எருமையூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று மாலை அவர், நண்பரை பார்ப்பதற்காக பூந்தமல்லிக்கு பைக்கில் கிளம்பினார். இவர், ஆவடி அருகே ஆயில்சேரி பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு வாலிபர், லிப்ட் கேட்டு அஜித்குமார் பைக்கில் ஏறியுள்ளார். பின்னர் அவருடன் அங்கிருந்து கொஞ்சதூரம் சென்றதும் மேலும் 2 பேர், பைக்கை மறித்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் லிப்ட் கேட்டு ஏறிய நபர் உள்பட மூவரும் சேர்ந்து அஜித்குமாரை சுற்றிவளைத்து கத்திமுனையில் மிரட்டி செல்போன், மோதிரத்தை பறித்துள்ளனர். பின்னர் அஜித்குமாரின் கூகுள்பே மூலம் மற்றொரு வங்கி கணக்குக்கு 12 ஆயிரம் ரூபாயை மாற்றியுள்ளனர். இதன்பிறகு அஜித்குமாரின் பைக்கை பிடுங்கிக்கொண்டு மூவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுபற்றி அஜித்குமார் ஆவடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி செய்து தப்பிய மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: