கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பணிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பணிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெண்டர் விடப்பட்ட சாலைப்பணி ஒப்பந்தங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 13 நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் பணியின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் டெண்டர் என்பது பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுக்க வேண்டும். பணிக்கான ஒப்பந்தமிடும்போது அனைத்து பத்திரிகைகளிலும் 15 நாட்களுக்கு முன்பாக ஒப்பந்த புள்ளி சம்மந்தமாக விரிவான விளக்கங்களை கொடுக்க வேண்டும். இதுபோன்ற எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் 13 நகராட்சி பகுதிகளில் சாலை பணிகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு டெண்டர் விடப்பட்டுள்ளதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது.

இதில் குறிப்பாக அரசின் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த டெண்டர் பணியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த முறைகேடுகளில் துணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சுரேஷ்ராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் புகழ்காந்தி ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்னிறுத்தினார். குறிப்பாக இந்த ஒப்பந்த பணிகள் கோரப்படும் போது எந்தவித வழிமுறைகளையும் பின்பற்றவில்லை.

தேர்தல் காலத்தில் அவசர அவசரமாக 2 தினங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் ஒப்பந்த புள்ளிகளில் முழுமையாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே இதனை உடனடியாக ரத்து செய்வது மட்டுமல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஒப்பந்த புள்ளிகளில் முறைகேடுகள் தெரிய வருவதால் 13 நகராட்சி பகுதிகளில் விடப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும். இந்த விசாரணையை 4 வாரத்திற்குள் முடித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: