ஏழை எளிய மக்கள் பாதிக்காதவாறு கோயில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை சவுகார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயிலில் இணையதளம் மூலம் வாடகை செலுத்தும் முறையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல் இணையவழி முறையில் கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி 5720 கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு, 1492  கோயில்கள் மூலமாக இதுவரை ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்சியாக அனைத்து கோயில்களின் அசையா சொத்துக்களை வருமானம் ஈட்டும் சொத்துக்களாக மாற்ற 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். கணினி மூலம் வாடகை செலுத்த இயலாத வாடகைதாரர்கள் வழக்கம் போல் கோயில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம்  ரசீதினை பெற்றுக்கொள்ளலாம். வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோயில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய கோயில்களில் அமைந்துள்ள பொது வசூல் மையத்தில் கேட்பு தொகையினை செலுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அறநிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாகும். வசூல் முறையாக நடக்கிறதா என்பதனை தொடர்ந்து கண்காணித்து, வருமானம் ஈட்டாத சொத்துக்களை ஏலத்திற்கு கொண்டு வந்து, அறநிறுவனங்களுக்கான வருவாயினைப் பெருக்கிட இயலும். முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வசூல் நிலுவை தொடர்பான புள்ளி விவரங்களை, உயர் அலுவலர்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாக அமையும். இந்நேர்வில், முறையாக வாடகை செலுத்தாத இனங்களின் மீது துரித நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த 2012ம் ஆண்டு அமைக்கப்பட்ட நியாய வாடகை நிர்ணய குழு ஆய்வு மேற்கொண்டு அளித்த ஒப்புதல்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் 15% வாடகை உயர்த்திடவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தமிழகம் முழுவதும் இருந்து வாடகை அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வரும் புகார்களின் அடிப்படையில், முதல்வரின் அனுமதி பெற்று வாடகை நிர்ணய குழுவை மாற்றியமைத்து அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான வாடகை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் தங்களது வீடுகளை பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ள அந்தந்த கோயில் அலுவலரிடம் கடிதம் கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்த அரசு சட்டத்தின் படி நடைபெறும் அரசு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதல்படி நடக்கின்ற அரசு. இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே துவக்கப்பட்ட, மற்றும் துவக்கப்பட உள்ள கல்லூரிகளில் ஆன்மீக வகுப்புகள் தொடங்க உயர் கல்வித் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம் நிச்சயம் அனுமதி பெற்றவுடன் வகுப்புகள் துவங்கப்படும். தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க உரிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். கடந்த 10 ஆண்டாக இத்துறை இயங்காத துறையாக சீர் கெட்டு கிடந்தது. அதனை தற்போது சீரமைத்து பக்தர்களின் நலன் மற்றும் கோயில் பணியாளர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களுக்காக இரவு பகல் பாராமல் பாடுபடும் தமிழக முதல்வர் மீதும் தமிழக மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் வேண்டுமென்றே பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகிறார்கள்.

நிச்சயம் அவர்கள் பொய் பிரச்சாரம் தமிழக மக்களிடையே எடுபடாது. பொய் பிரச்சாரம் செய்பவர்கள் தமிழக மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது அறநிலையத்துறை ஆணையர்  குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்பிரியா, சென்னை மண்டல உதவி ஆணையர் கவெனிதா,  செயல் அலுவலர் ராதாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: