போதைப்பொருள் விவகாரம்!: வாட்ஸ்ஆப் உரையாடலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்..!!

மும்பை: மும்பை சொகுசு கப்பல் போதைப்பொருள் விவகாரம் தொடர்புடைய வாட்ஸ்ஆப் உரையாடல் ஒன்றை வெளியிட்டு மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மும்பையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அச்சமயம், போதை பொருட்களுடன் கூடிய விருந்தில் பங்கேற்றதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்த போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது ஆர்யன் கான் ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக வாட்ஸ்ஆப் உரையாடலை வெளியிட்டு நவாப் மாலிக் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். ஆர்யன் கான் கைது நடவடிக்கை ஷாரூக்கானிடம் பணம் பறிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆர்யன் கானை விடுதலை செய்ய என்.சி.பி. அதிகாரி சமீர் வாங்கடே பேரம் பேசியதாகவும் மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

தற்போது, இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கே.பி. கோசாவியின் வாட்ஸ்ஆப் உரையாடல்களை நவாப் மாலிக் வெளியிட்டுள்ளார். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சி உரிமையாளரான கஷிப் கான் குறித்தும், கப்பல் விருந்துக்கு பிரபலங்களை அழைப்பது குறித்த உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. கஷிப் கானிடம், சமீர் வாங்கடே விசாரணை மேற்கொள்ளாதது ஏன்? எனவும் இவை அனைத்திற்கும் சமீர் வாங்கடே தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

Related Stories: