கொடைக்கானல் பேத்துப்பாறையில் யானைகள் முகாம்; வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிரம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பேத்துப்பாறை அஞ்சு வீடு, அஞ்சுரான் மந்தை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு, விவசாய நிலங்கள், விளைபொருட்களை நாசப்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டு, விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி விவசாயிகள் வனத்துறையினருக்கும், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாருக்கும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் சிறப்பு கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இக்குழுவினர் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் வனத்துறையினர் முகாமிட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். விரைவில் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: