பாபநாசம் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு; தாமிரபரணியில் தொடர்ந்து பாயும் வெள்ளம்.!

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை குறைந்துள்ளது. எனினும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு அதிக நீர் வரத்து உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மழை இல்லை. நல்ல வெயில் நிலவியது.  எனினும்  பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால்  அணைகளுக்கு அதிக நீர்வரத்து உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையை எட்டிய நிலையில், அதிக நீர்வரத்து காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. தென்காசி மாவட்டம், கடனாநதி, ராமநதி அணைகளும் நிரம்பிய நிலையில் அந்த அணைகளில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காட்டாற்று பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 11 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்  தொடர்ந்து கரை புரண்டு ஓடுகிறது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் ஓடியது. தாமிரபரணி ஆற்றில் உள்ள கல் மண்டபங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 137.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 377 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரத்து 771 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.6 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.30 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1244 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 105 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது. நம்பியாறு அணையின் நீர்மட்டம் 21.84 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 19 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 51 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் 700 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, பாபநாசம் அணையில் 21 மிமீ, சேர்வலாறில் 6 மிமீ, மணிமுத்தாறு அணையில் 4.8 மிமீ, கொடுமுடியாறில் 25 மிமீ, அம்பையில் 3 மிமீ, சேரன்மகாதேவியில் 2 மிமீ, நாங்குநேரியில் 4.6 மிமீ, ராதாபுரத்தில் 2 மிமீ, களக்காட்டில் 7.2 மிமீ, மூலக்கரைப்பட்டியில் 8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 415 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 46 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகள் நிரம்பி வழியும் நிலையில் கருப்பாநதி அணைக்கு வரும் 371 கன அடி தண்ணீர், குண்டாறில் வரும் 71 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 311 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 93 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழையளவை பொறுத்தவரை, கடனாநதியில் 30 மிமீ, ராமநதியில் 3, கருப்பாநதியில் 8, குண்டாறில் 17, அடவிநயினார் அணையில் 102 மிமீ, ஆய்க்குடியில் 8 மிமீ, செங்கோட்டையில் 14, தென்காசியில் 7.4, சிவகிரியில் 9.6 மிமீ மழை பெய்துள்ளது.

Related Stories:

More