×

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை மீறாமல் 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில் தான் உள் ஒதுக்கீடு தரப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல, 7 பிரிவினருக்கானது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி உள் ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு தரப்பட்டது.

100 பக்கங்களை கொண்ட இந்த மேல் முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை இந்த தடை உத்தரவின் மூலமாக சந்தித்து இருப்பதாக தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தவறாகவும், தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமரன் சார்பில் இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்கு இத்தகைய உள்ஒதுக்கீடுகளை கொண்டு வருவதற்கான அதிகாரம் இந்திய அரசியல் சாசனமே வழங்கி இருக்கிறது. அது மாநில உரிமைகளுக்கு கீழ் வரக்கூடியது என்றும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்ற விதிமுறை உள்ளது. அதனை மீறாமல் அதிகார வரம்பிற்கு உட்பட்டு நாங்கள் உள் இடஒதுக்கீட்டினை கொண்டு வந்துள்ளோம் என்று பல்வேறு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர். வேறு மாநிலங்களில் உள்ள உள் இடஒதுக்கீடு முறைகள் மற்றும் அவற்றின் மீதான நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்களன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Supreme Court of Tamil Nadu ,Vanni , Reservation, appeal
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...