×

41வது முறையாக நிரம்பியுள்ள மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்..!!

சேலம்: 41வது முறையாக நிரம்பியுள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், காவிரி டெல்டா பகுதியின் ஜீவ நாடியாகவும் விளங்கக்கூடிய மேட்டூர் அணையானது வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 13ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் அணைக்கு வரும் 40,000 கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். அமைச்சருடன் நீர்வளத்துறை தலைமை செயலாளர், அதிகாரிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் கரையோர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நீர் ஏற்று நிலையம் மற்றும் உபரி நீர் திட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறக்கூடிய உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நிரப்பும் பணியானது கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதால் நீரேற்று நிலையம் மூலம் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்று நிலைய பகுதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்ய இருக்கிறார். இதனை தொடர்ந்து ஒகேனக்கல் செல்லும் அமைச்சர், அங்கும் ஆய்வு நடத்த உள்ளார்.


Tags : Matur Dam ,Minister of Water Resources ,Durimurugan , Mettur Dam, Minister Duraimurugan, study
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு