கோவையில் பயங்கரம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து 3 பேர் கொலை: மனைவி, மகளிடம் அத்துமீறியதால் பழி தீர்த்த பெயின்டர் கைது

கோவை: கோவையில் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து 3 பேரை கொலை செய்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டதரசியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் முருகானந்தம் (57). பெயின்டர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் பார்த்திபன் (35), சக்திவேல் (61). இவர்களும் பெயின்டர்களாக வேலை செய்து வந்தனர். கடந்த 3ம் தேதி தீபாவளியையொட்டி 3 பேரும் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மது குடித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அவரவர் வீட்டுக்கு சென்றவர்கள் துடிதுடித்து இறந்தனர். பிரேத பரிசோதனையில் மதுவில் சயனைடு கலந்திருந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து கொலையா? என்ற கோணத்தில் விசாரித்தனர். இதில் பட்டதரசியம்மன் கோயில் வீதியை சேர்ந்த பெயின்டர் ராஜசேகர் (63) மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் மது பாட்டில் வாங்கி அதில் சயனைடு கலந்து கொடுத்ததில் 3 பேரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று ராஜசேகரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தி மீதமிருந்த சயனைடு பறிமுதல் செய்யப்பட்டது. ராஜசேகர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், என் நண்பர்களான முருகானந்தம், பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் என் இரண்டாவது மனைவி, இளைய மகளிடம் அத்துமீறி நடக்க முயன்றனர். இவர்களை பழி தீர்க்க தீபாவளிக்கு முந்தைய நாளில் நான் மது பாட்டில் வாங்கி அதில், சயனைடு கலந்து அவர்களுக்கு பரிசளித்தேன். அவர்களும் ஜாலியாக வாங்கி குடித்தார்கள். பாழடைந்த கட்டிடத்தில் நான் வாங்கி தந்த மதுவை இவர்கள் குடிப்பதை மறைந்திருந்து பார்த்தேன். சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்ற இவர்கள் இறந்து விட்டனர். இவ்வாறு ராஜசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

More