ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்: பாமக மாவட்ட செயலாளர் ஆவேசம்

மயிலாடுதுறை: நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம், பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர். அப்போது பழனிசாமி கூறுகையில், ஜெய்பீம் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டி விட்டு, திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தினரை இழிவு படுத்தும் விதமாகவும், குற்றவாளி கதாபாத்திரத்திற்கு மட்டும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குரு பெயரை சூட்டியுள்ளனர். குற்றவாளி வீட்டில் வன்னியர் சங்க அக்னி குண்ட சின்னத்தை காட்டி மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னியர் சமூகத்தினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற கதாபாத்திரங்களை அமைத்துள்ளனர். இந்த இரண்டு சமூகத்திற்கிடையே மோதலை உருவாக்க வேண்டும் என்ற முறையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சூர்யா எங்கு சென்றாலும், அவரை உதைக்கும் நபருக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கும். எங்கள் பகுதியில் சூர்யாவின் எந்த திரைப்படத்தையும் திரையிட விடமாட்டோம். இனி சூர்யா தமிழகத்தில் வான்மார்க்கமாக தான் செல்ல முடியும். தரை மார்க்கமாக செல்ல முடியாது என்றார்.

Related Stories: