×

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் மெட்வதேவுக்கு முதல் வெற்றி

டுரின்: இத்தாலியில் நடைபெறும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன்  டானில் மெட்வதேவ் (ரஷ்யா) முதல் வெற்றியை பதிவு செய்தார். சிவப்பு பிரிவில் உள்ள வீரர்களுக்கான முதல் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. அதில் நடப்பு சாம்பியன் மெட்வதேவ் (2வது ரேங்க்), போலந்துவீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் (7வது ரேங்க்) மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை ஹூபர்ட் 7-6 (7-5) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். ஆனால், அடுத்த 2 செட்களையும்  மெட்வதேவ் 6-3, 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்தார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி நேரத்துக்கு நீடித்தது.

மற்றொரு சிவப்பு பிரிவு ஆட்டத்தில்  ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (3வது ரேங்க்), இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி (6வது ரேஙக்) மோதினர். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்ட முதல் செட்டை ஸ்வெரவ் 7-6 (9-7) என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். 2வது செட்டிலும் 1-0 என ஸ்வெரவ் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக அவதிப்பட்ட பெரெட்டினி ஆட்டத்தில் இருந்து விலகினார்.  அதனால் ஸ்வெரவ் முதல் வெற்றியை வசப்படுத்தினார். பெரெட்டினி இனி இந்த தொடரில் தொடர்ந்து பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர் விலக நேரிட்டால், 9வது இடத்தில் இருக்கும் யானிக் சின்னர் (இத்தாலி) களமிறங்கும் வாய்ப்பு உருவாகும்.

Tags : ATP Finals ,Medvedev , First win for ATP Finals tennis Medvedev
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்