ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி அறிவிப்பு: லால்ரேம்சியாமி கேப்டன்

புதுடெல்லி: தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள ஜூனியர் மகளிர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் மகளிர் ஹாக்கி உலக கோப்பை (யு21) தொடர், தென் ஆப்ரிக்காவில் டிச.5ம் தேதி தொடங்கி டிச.16 வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, இங்கிலாந்து, தென் கொரியா, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, உருகுவே, ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி... அர்ஜென்டினா, ஜப்பான், ரஷ்யா அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், உலக கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணியை, ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய சீனியர் மகளிர் அணியில்  விளையாடிய ஒலிம்பியன் லால்ரேம்சியாமி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இஷிகா சவுத்ரி துணைக் கேப்டனாகவும், குஷ்பு, பிச்சு தேவி கரிபம்  ஆகியோர் கோல் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் லால்ரேம்சியாமி மட்டுமின்றி சாலிமா தேடே, ஷர்மிளா தேவி ஆகியோரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.

இந்தியா: பிச்சு தேவி கரிபம் (கோல் கீப்பர்), குஷ்பூ (கோல் கீப்பர்), அக்‌ஷதா அபசோ டேக்லே, இஷிகா சவுத்ரி (துணை கேப்டன்), பிரியங்கா, மரினா லால்ரமங்ஹகி, அஜ்மினா குஜூர், பல்ஜித் கவுர், ரீத், வைஷ்ணவி விட்டல் பால்கே, சாலிமா தேடே, ஷர்மிளா தேவி, லால்ரேம்சியாமி(கேப்டன்), பியூட்டி  டங்டங், தீபிகா, மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, ஜிவான் கிஷோரி டப்பூ.

Related Stories:

More