பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி இடமாற்றம் உறுதி: ஒப்புதல் வழங்கினார் ஜனாதிபதி

புதுடெல்லி: பல்வேறு போராட்டங்களுக்கு இடையிலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி பணி இடமாற்றத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொலிஜியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கடந்த 17ம் தேதி கடிதம் எழுதினர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 31 மூத்த வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதினர். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜியின் பணியிட மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது அது ஒன்றிய அரசின் அரசிதழிலும் வெளியிடபட்டுள்ளது. எனவே, பானர்ஜியின் இடமாற்றம் உறுதியாகியுள்ளது.

Related Stories: