காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினர் நலன் புறக்கணிப்பு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போபால்: காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினரின் நலன் புறக்கணிக்கப்பட்டதால் அவர்களின் அவலநிலைக்கு அக்கட்சியே காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியினரை பெருமைப்படுத்தும்  ஜன்ஜதியா கவுரவ் திவஸ் நாளாக கொண்டாட ஒன்றிய அரசு முடிவு எடுத்தது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த ஜன்ஜதியா கவுரவ் திவஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பழங்குடியினரின் அடையாளமாக கருதப்படும் பிர்சா முண்டாவின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: அம்பேத்கர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி போன்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ம் தேதி பகவான் பிர்சா முண்டா ஜெயந்தியாக கொண்டாடப்படும். `தார்தி ஆபா’ (பூமியின் தந்தை) என்று அழைக்கப்படும் பிர்சா முண்டா பழங்குடியினரின் கலாசாரமாக வாழ்ந்தவர். காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டது. அவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டதால், அவர்களின் இன்றைய அவலநிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஆனால், தற்போது இப்பிராந்தியத்தின் மேம்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கி இருந்த 100 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அதன் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழங்குடியினர் நியாயவிலை கடைகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க அவர்கள் வசிக்கும் கிராமங்களில் `உங்கள் கிராமங்களில் நியாயவிலை பொருட்கள்’ திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பழங்குடியினர் மத்தியில் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களுக்கு மரபணு ஆலோசனை அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 50 பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பழங்குடியினரின் நலனுக்காக தற்போதைய ஒன்றிய அரசு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More