×

தரமற்ற எம்சாண்ட் ஏற்றி வருவோர் மீது நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகை

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில், கல்குவாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனசேகரன், தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரிகள் நலச் சங்க தலைவர் நாராயணன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் தீனன், திருவள்ளூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சதீஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறியதாவது, `தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமானங்கள் மற்றும் பாலங்கள் சிதைந்து பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் புளியந்தோப்பு கே.பி.பார்க் மற்றும் கே.கே.நகர், ராமபுரம் போன்ற அரசு குடியிருப்புகள் அனைத்து சுவர்களும் விரல் பட்டாலே பெயர்ந்து வரக்கூடிய நிலையில் உள்ளது. இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் தரமற்ற எம்சாண்ட் மணல் மூலம் கட்டப்பட்டது. இந்த தரமற்ற எம்சாண்ட் மணல் அனைத்தும் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்தவை ஆகும். மேலும், குறிப்பிட்ட அளவைவிட அதிக பார மணல் ஏற்றி வரப்படுகிறது. இதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

ஆந்திராவின் தரமற்ற எம்சாண்ட் கும்மிடிப்பூண்டி, சத்தியவேடு, பெரியபாளையம், திருத்தணி, ஊத்துக்கோட்டை வழியாகத்தான் வருகிறது. சமீபத்தில் நிறுவப்பட்ட கும்மிடிப்பூண்டியில் சர்வதேச நவீன சோதனை சாவடி தயார் நிலையில் இருந்தும் அதனை பயன்பாட்டிற்கு செயல்படாமல் உள்ளது. அதிக பாரத்தை துல்லியமாக காட்ட கூடிய கருவிகள் உள்ளது. அதனை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே ஆந்திராவிலிருந்து தரமற்ற எம்சாண்ட் மணல்கள் தமிழகத்திற்குள் வருவதை தடுத்து நிறுத்தி முறைகேடாக செயல்படும் அனைத்து அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார். இதுதொடர்பான புகார் மனுவை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags : Emsant , Truck owners besiege collector's office in action against substandard Emsant loaders
× RELATED போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை...