×

திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சியில் டெங்கு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை: ஊழியர்கள் மும்முரம்

பூந்தமல்லி: திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவேற்காடு நகராட்சியில் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசுப்புழு ஆதாரங்களை அழிக்க நகராட்சியிலிருந்து 100 கொசுப்புழு ஒழிப்பில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடுகள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்தும் மக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மேற்பார்வையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள நீரில் ஆயில்பால் போடப்பட்டது. இதன் மூலம் கொசு முட்டை, கொசு உற்பத்தி தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் நாராயணன் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுதல், தேங்கிய மழைநீரில் கொசுக்கள் முட்டையிடாமல் தடுக்க ஆயில் தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : Thiruverkadu ,Poonamallee , Measures to prevent dengue production in Thiruverkadu, Poonamallee municipality: Employees busy
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...