7 அமைச்சர்கள் நேரடி ஆய்வு டெல்டா பயிர் சேதம் அறிக்கை தயார்

* முதல்வரிடம் இன்று தாக்கல்

* ஒரு லட்சம் ஏக்கர் பாதிப்பு

* பல நூறு கோடி சேதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட  அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு அறிக்கையை தயாரித்துள்ளது. முதல்வரிடம் சேத விவர அறிக்கையை இன்று தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தன. குறிப்பாக சென்னையில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களிலும் அதிக அளவு பயிர் சேதம் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு கடந்த 12ம் தேதி சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். கிராமம் வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதேபோல 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக சென்று பார்வையிட்டார். அவரும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஒரு லட்சம் ஏக்கர் நெல், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் குழு ஆய்வுக்குப் பிறகு கடந்த இரு நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. தற்போது அமைச்சர்கள் அறிக்கையை தயாரித்து முடித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று மாலையில் அவர் சென்னை திரும்பினார். அதை தொடர்ந்து அமைச்சர்கள் குழு, முதல்வரிடம் இன்று அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இந்த அறிக்கை மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாதிப்பு விவரங்களுடன் சேர்த்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, நிவாரண உதவி கோரப்படும் என்று தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

More