×

கோவை மாணவி தற்கொலை போன்று தமிழகத்தில் இனி நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, கடந்த 11ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்து சென்ற கடிதத்தின் அடிப்படையில், ஒரு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவருகிறது.  குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டும் போதாது. மாணவியின் உயிரிழப்புக்கு பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் நீதி கேட்கிறார்கள். வேலியே பயிரை அழிப்பதற்கு இனி ஒருபோதும் தமிழக பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும்.

 இதுபோன்ற சம்பவம் இனி தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடைபெற வேண்டும். மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியர் உட்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.



Tags : Coimbatore ,Tamil Nadu ,GK Vasan , Coimbatore, student, suicide, prevent, severe action
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...