×

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசு சம்மதம்..!!

லக்னோ: லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த மாதம் 3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும், இதுவே பின்னர் வன்முறையாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இவ்விவகாரத்தில், இரு வழக்கறிஞர்கள் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான விசாரணையை உத்தரப்பிரதேச காவல்துறை தாமதமாக மேற்கொள்கிறது என உச்சநீதிமன்றம் சுட்டிக்‍காட்டியது.

இந்நிலையில், இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தபோது, லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணை பற்றி உத்தரப்பிரதேச அரசு முடிவெடுக்க வரும் திங்கட்கிழமை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்துவது பற்றி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இதனையடுத்து, விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி பற்றி நவம்பர் 17ல் அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூத்த காவல்துறை அதிகாரிகள் சிலரை குழுவில் கூடுதலாக சேர்க்கவும் உ.பி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் நீதிபதிகள் ராகேஷ்குமார், ரஞ்சித் சிங் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Tags : Lakhimpur ,Uttar Pradesh government , Lakhimpur, Violence, Investigation
× RELATED லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த...