அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றார்

நாமக்கல்: நாமக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட, அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர் மீது அவரது உறவினர் குணசீலன், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் அளித்தார். அதில், சரோஜா அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக ரூ76 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே சரோஜாவும் அவரது கணவரும் முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு 2 முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சரோஜாவின் வழக்கறிஞர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்த 2 முறை வாய்தா கேட்டார்.

இதை தொடர்ந்து, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று காலை சரோஜாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனால் மனு மீது விசாரணை நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து, சரோஜா மற்றும் அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: