கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; 4 தரைப் பாலங்கள் துண்டிப்பு: பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தவிப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 4 தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்க அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கன மழையாலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல பகுதிகளில் தரைப்பாலங்களை மூழ்கடித்து வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாமந்தவாடா, கீழ்கால்பட்டடை, சங்கீதகுப்பம், சானாகுப்பம் பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் இருபுறமும் கரைப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் ஒன்றிய சாலைகளும் சேதம் அடைந்துள்ளது. சாமந்தவாடா தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 4 கி.மீ சுற்றி, பள்ளிப்பட்டு பிரதான சாலைக்கு மக்கள் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அரவாசப்பட்டை பகுதியில் ஒன்றிய சாலை  துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

Related Stories:

More