×
Saravana Stores

விஸ்வரூபம் எடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு!: உ.பி.யில் 120க்‍கும் மேற்பட்டோருக்‍கு தொற்று உறுதி...அச்சத்தில் மக்கள்..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் 120க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உத்திரப்பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த மாதம் 23ம் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு முதல் முதலில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ஜிகா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கான்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கான்பூர் மாவட்டத்தில் இதுவரை 123 பேருக்கும், கன்னோஜில் ஒருவருக்கும், லக்னோவில் 3 பேருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் உத்திரப்பிரதேச சுகாதாரத்துறை செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூரில் ஜிகா வைரஸ் நிலைமையை ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். ஆதித்யநாத், கடுமையான கண்காணிப்பை உறுதி செய்யவும், கொசுப் பெருக்கத்தைத் தடுக்க வீடு வீடாகச் சுத்தப்படுத்துதல் மற்றும் ஃபோகிங் டிரைவ்களை மேற்கொள்ளவும் மாநில சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொசுக்கள் மூலமாக பரவக்கூடிய இந்த வைரஸ் முதலில் உகாண்டா மற்றும் தான்சானியாவில் உள்ளவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. இதன் மூலமாக லேசான காய்ச்சல், தடிப்புகள், வெண்படலம், மூட்டுவலி, தலைவலி ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் உடலுறவு மூலமாக பரவ கூடிய ஒன்று. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

Tags : UP , Zika virus, Uttar Pradesh, 120 people
× RELATED ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை