×

ஐசிசி உலக கோப்பை டி20 ஆஸி. புதிய சாம்பியன்: பந்துவீச்சில் கலக்கினார் ஹேசல்வுட்

துபாய்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பைனலில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் காயம் அடைந்த கான்வேக்கு பதிலாக டிம் செய்பெர்ட் இடம் பெற்றார். மார்டின் கப்தில், டேரில் மிட்செல் இருவரும் நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். மிட்செல் 11 ரன் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் வேடு வசம் பிடிபட்டார். அடுத்து கப்திலுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார்.

பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. வில்லியம்சன் 21 ரன் எடுத்திருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹேசல்வுட் நழுவவிட்டார். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட வில்லியம்சன் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். கப்தில் 28 ரன் எடுத்து (35 பந்து, 3 பவுண்டரி) ஸம்பா சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, வில்லியம்சனுடன் கிளென் பிலிப்ஸ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய வில்லியமன் 32 பந்தில் அரை சதம் அடித்தார். கேன் - பிலிப்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 16வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்த வில்லியம்சன் 22 ரன் விளாசி மிரட்டினார்.

பிலிப்ஸ் 18 ரன், வில்லியம்சன் 85 ரன் (48 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். டி20 உலக கோப்பை பைனலில் அதிகபட்ச ஸ்கோராக வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் படைத்த சாதனையை (85*) வில்லியம்சன் நேற்று சமன் செய்தார். நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. நீஷம் 13 ரன், செய்பெர்ட் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4 ஓவரில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டார்க் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கி ஏமாற்றமளித்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

வார்னர், கேப்டன் பிஞ்ச் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிஞ்ச் 5 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் மிட்செல் வசம் பிடிபட்டார். அடுத்து வார்னருடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். இவர்களின் அதிரடியால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வார்னர் 53 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஆஸ்திரேலியா18.5 ஓவரில்2 விக்கெட் இழப்புக்கு173  ரன் எடுத்து வென்று முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. மிட்ஷெல் மார்ஷ் 77 ரன் (50 பந்து, 6  பவுண்டரி, 4 சிக்சர்), கிளென் மேக்ஸ்வெல் 28 ரன் (18 பந்து, 4 பவுண்டரி,1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 2  விக்கெட் எடுத்தார். நியூசிலாந்து அணி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.


Tags : ICC World Cup D20 Aussies ,Hazelwood , ICC World Cup, Australia, Cricket
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்