ஆரணி ஆற்றில் படகு சேவை: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம்  அருகே மங்களம், ஆத்துமேடு, காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும்  மாணவ, மாணவிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஆகியோர் மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே மண் சாலை  வழியாக,  ஆரணி, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம், திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி  நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  மங்களம் பகுதி மக்கள் மண் சாலை  வழி வழியாக செல்லமுடியவில்லை  இதனால், கிராம மக்கள் 15 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு பெரியபாளையம்  சென்று அங்கிருந்து  மற்ற பகுதிகளுக்கு சென்றனர்.  இந்நிலையில்,  மங்களம் கிராமத்தில் இருந்து ஆரணிக்கு படகு சேவை தொடங்க,  ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று படகு சேவை தொடங்கியது.  

இதை, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.  பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,  பருப்பு ஆகியவைகளை வழங்கினார். அப்போது, கிராம மக்கள், அவரிடம், புதிய பாலம் கட்ட கோரிக்கை வைத்தனர்.   இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், பூண்டி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்,   மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர்,  ஊராட்சி மன்றதலைவர் சுரேஷ், திமுக நிர்வாகிகள் தமிழன் இளங்கோ, முத்து,  கரிகாலன், ஜெடராஜன், மனோகரன், தேவராஜ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: