வேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்ததில் பெண் பலி: மகளை மீட்க தீவிர முயற்சி

வேலூர்: வேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து பாறை உருண்டு குடிசை மீது விழுந்ததில் பெண் பலியானார். வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்திருந்தது. மேலும் நேற்று காலை லேசான வெயில் காய்ந்தது. இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கி வேலூரில் சுமார் ஒரு மணிநேரத்துக்கு கனமழை நீடித்தது. இந்நிலையில் மதியம் 2 மணியளவில் வேலூர் காகிதப்பட்டறை மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருந்த பல டன் எடை கொண்ட பாறை திடீரென உருண்டு அங்குள்ள குடிசை வீடு மீது விழுந்தது.

இதில் ரமணி(45), அவரது மகள் நிஷாந்தி(24) ஆகிய 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்து அங்கு தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடந்த மீட்புப்பணியில் ரமணி மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வழியிலேயே இறந்தார். நிஷாந்தியை  மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் அரக்கோணத்தில் இருந்து 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

More