பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் வினை பெட்ரோல் பங்க்கில் தீப்பிடித்து எரிந்த கார்: தேவகோட்டையில் பரபரப்பு

தேவகோட்டை: தேவகோட்டையில் பெட்ரோல் பங்கில் காரில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஊஞ்சனை புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (62). இவர் தனது புது வீட்டுக்கு இன்று (நவ. 15) கிரகப்பிரவேசம் நடத்துகிறார். அதற்காக நேற்று காய்கறிகள் வாங்குவதற்காக தனது சொகுசு காரில் பேரனுடன்  தேவகோட்டை சென்றார். அப்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.1,550 கொடுத்து பெட்ரோல் போட கூறியுள்ளார். அந்த பணியாளர் தவறுதலாக காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசலை போட்டுள்ளார்.

டீசல் போட்டு முடித்தப் பிறகே, தனது தவறை அந்தப் பணியாளர் உணர்ந்துள்ளார். உடனடியாக, கார் உரிமையாளர் பாண்டியனிடம், ‘‘நான் தவறுதலாக பெட்ரோலுக்குப் பதில் டீசல் போட்டு விட்டேன். அதனால், காரை ஓட்ட வேண்டாம். மெக்கானிக்கை அழைத்து டீசலை எடுப்போம்’’ எனக் கூறியுள்ளார். அதைதொடர்ந்து காரில் இருந்த பாண்டியன் தனது பேரனுடன் வெளியே இறங்கி நின்றுள்ளார்.

அதன்பின் மெக்கானிக் வந்து, டீசலை எடுத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் டேங்க் வெடித்து கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. பங்க்கை சுற்றி இருந்த அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

Related Stories: