குமரியில் 3வது நாளாக வெள்ளத்தில் தவித்த மக்கள்: மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பால் இயல்பு வாழ்க்கை அடியோடு முடக்கம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று 3 வது நாளாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்தன. மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி நள்ளிரவில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.  தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்ததுடன், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.  இதன் காரணமாக கரையோர கிராமங்களில் இருந்த மக்கள் நேற்று முன்தினம் காலையில் இருந்தே அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு துறை, காவல் துறையினர் மீட்பு படகுகள் மூலமும், கயிறு கட்டியும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பழையாற்றில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு காரணமாக சுசீந்திரத்தில் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய, விடிய மீட்பு பணி நடந்தது. நேற்று காலையிலும் வீடுகளில் இருந்தவர்களை கயிறு கட்டியும், படகு மூலமும் மீட்கும் பணி நடந்தது.  பல இடங்களில் மாடிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். நேற்று முன் தினம் இரவு முதல் மழை குறைந்ததது. இதன் காரணமாக மெல்ல, மெல்ல வெள்ளம் வடிய தொடங்கியது. நேற்று பகல் பொழுதில் சாரல் மட்டுமே இருந்தது. இந்த மழை வெள்ளத்தால் வீடுகளில் இருந்த  டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. அவற்றை மீட்டெடுக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சுமார் 50 ஆயிரம் வீடுகள் தற்போது வெள்ளத்தில் மிதக்கின்றன. கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கீரிப்பாறை, தெரிசனங்கோப்பு மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால், மலையோர கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.  

அமைச்சர் பேட்டி: குமரியில் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

குமரி  மாவட்டத்தில் ஆக்ரமிப்புகள் மட்டுமல்ல எங்கெல்லாம் நன்செய் நிலங்கள்  உள்ளதோ, அவை முழுவதும் கட்டிடமாக மாறியதால்தான் இதுபோன்ற மோசமான விளைவுகள்  வந்ததற்கு காரணம். சாலையோரங்களில் உள்ள நன்செய் நிலங்கள் முழுவதும் வீடு  கட்டிவிட்டால் என்ன செய்வது? ஆக்ரமிப்புகளும் உள்ளது, இரண்டுமே  பாதிப்புகளுக்கும், சேதங்களுக்கும் காரணம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை  எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின்  முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வரும் நிலையில் உபரி  நீர் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம்  கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.  குற்றாலம் மெயினருவியில் 2வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு  ஏற்படுத்தது. இதேபோல் பிற அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மண்சரிவு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள  பர்கூர் மலைப்பாதையில் கடந்த 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது.  இதனால், கர்நாடகா- தமிழகத்திற்கிடையே சுமார் 5 மணி நேரம் மலைப்பாதையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவு மற்றும் பாறைகள் அகற்றப்பட்ட  பின்னரே மீண்டும் மலைகிராமங்களுக்கான போக்குவரத்து துவங்கியது.

பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 7 பேர் மீட்பு: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3பேர் உட்பட 7 பேர் நேற்று பாலாற்றில் குளித்தபோது திடீரென ெவள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றின் நடுவே உள்ள உறைக்கிணற்றின் மீது 7 பேரும் ஏறிக்கொண்டு, காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்களளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகு மூலம் மீட்டனர்.

தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு

தர்மபுரி மாவட்ட  முத்தம்பட்டி மலைப்பகுதியில் கடந்த வாரம் ரயிலின் மீது பாறைகள் உருண்டு விழுந்ததில் பயணிகள் ரயில் தடம் புரண்டது. அங்கு ரயில் பாதை சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.  இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அதே பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்தன. இதையடுத்து, தர்மபுரி வழியாக இயக்கப்பட்ட  3 ரயில்கள் பகல் நேரத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மலர். இவர்களுக்கு மாதவன்(20) என்ற மகனும், மாளவிகா(20) என்ற மகளும் உள்ளனர். கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் செல்வதால், அதனை பார்க்க வேண்டும் என இருவரும் கூறியுள்ளனர். இதையடுத்து நாகராஜ் தனது குடும்பத்தினருடன் ஆற்றுக்கு செல்ல முடிவு செய்து, தனது நண்பரான முத்துலிங்கம் மகன் லோகேஸ்வரன்(16) என்பவரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

நேற்று மதியம் வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள கஸ்டம்ஸ் சாலை அருகே தென்பெண்ணை ஆற்றில் கரையோரம் சென்று குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், மாளவிகா திடீரென நீரில் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து மாதவனும், லோகேஸ்வரனும் மாளவிகாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது 3 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து நாகராஜ் உடனடியாக செல்போன் மூலம் ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்  3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி, லோகேஸ்வரன் மற்றும் மாளவிகா ஆகிய 2 பேரையும் சடலமாக மீட்டனர். மாதவனின் சடலத்தை தேடும் பணி நடக்கிறது. நாகை மாவட்டம் நாகூரில் மழைக்கு  வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஜெகபர் நாச்சியார் (65) பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்டா பாதிப்பு குறித்து முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்பிப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில்  நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி டெல்டா மாவட்டங்களில் 17 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் உத்தரவின்பேரில் எனது தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தோம். இதுகுறித்த அறிக்கையை (செவ்வாய்கிழமை) நாளை முதல்வரிடம் வழங்க உள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரே 600 முதல் 700 முறை கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ’’’’ என்றார்.

Related Stories: