×

போட்டோவுக்கு மாலை போட கூட வரவில்லை நேரு பிறந்த நாளை புறக்கணித்த பாஜ தலைவர்கள்: காங்கிரஸ் கடும் அதிருப்தி

புதுடெல்லி: நாட்டில் முதல் பிரதமரான மறைந்த ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி டிவிட்டர் மூலமாக நேருவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்,’ என கூறியுள்ளார். டெல்லி சாந்தி வனத்தில் உள்ள நேருவின் நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நமக்கு தேவையானது  ஒரு  அமைதியான தலைமுறை.

உண்மை, ஒற்றுமை மற்றும் அமைதியை பெரிதும் மதிக்கும் நாட்டின் முதல் பிரதமரை நினைவு கூர்வோம்,’ என கூறியுள்ளார். இதேபோல், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோரும் மறைந்த முன்னாள் பிரதமரின் பங்களிப்பை சமூக வலைதள பக்கங்களில் நினைவு கூர்ந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நேருவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ட்விட்டரில்,  ‘நாடாளுமன்ற மத்திய அரங்கில் புகைப்படங்களாக அலங்கரித்தவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் பாரம்பரிய நிகழ்ச்சியில் அசாதாரண காட்சி. மக்களவை சபாநாயகர் வரவில்லை. மாநிலங்களவை தலைவர் வரவில்லை. ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. இதனை விட மிகப்பெரிய கொடூரம் இருக்க முடியுமா?,’ என கண்டித்துள்ளார்.  இதற்கு பதில் அளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், ‘இது எதுவும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த அரசானது நாடாளுமன்றம் உட்பட நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களை ஒரே நேரத்தில் அழித்து வருகின்றது,’  என குறிப்பிட்டுள்ளார்.


Tags : BJP ,Nehru ,Congress , Photo, evening, BJP leaders boycotting Nehru's birthday, Congress, dissatisfied
× RELATED மக்களை மனதளவில் மாற்ற செய்யும் உத்தி...