எம்பாப்பே 4 கோல் அடித்து அமர்க்களம் பிபா உலக கோப்பைக்கு பிரான்ஸ் அணி தகுதி

பாரிஸ்: கஜகஸ்தான் அணியுடனான தகுதிச் சுற்று போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற பிரான்ஸ் அணி, கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றது.

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், கத்தார் நாட்டில் அடுத்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 32 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.

ஐரோப்பிய தகுதிச் சுற்றில் பாரிஸ் நகரில் நடந்த போட்டியில் பிரான்ஸ் - கஜகஸ்தான் அணிகள் நேற்று மோதின. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்கு, நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 6வது, 12வது, 32வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.  தாய்நாட்டுக்காக எம்பாப்பே அடித்த முதல் ஹாட்ரிக் இது. இடைவேளையின்போது பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பிரான்ஸ் அணிக்கு பென்சிமா 55வது மற்றும் 59வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் போட்டார். பிரான்சின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கஜகஸ்தான் வீரர்கள் திணறினர்.

தொடர்ந்து 75வது நிமிடத்தில் கிரீஸ்மேன், 87வது நிமிடத்தில் டியாபி கோல் அடித்தனர். 87வது நிமிடத்தில் எம்பாப்பே தனது 4வது கோலை அடித்தார். ஆட்ட நேர முடிவில் 8-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற பிரான்ஸ் அணி, 2022 பிபா உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. டி பிரிவில் அந்த அணி 7 லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிராவுடன் 15 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Related Stories: