டபுள்யுடிஏ பைனல்ஸ்: பவுலா படோசா அசத்தல்

குவாதலஜாரா: டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் சிசென்-இட்ஸா பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்ததுடன் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தார். சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மோதும் இந்த தொடர், மெக்சிகோவின் குவாதலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது. தனது முதல் லீக் ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனை அரினா சபலென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்த படோசா, 2வது லீக் ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியை எதிர்கொண்டார்.

டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்ற படோசா, 2வது செட்டிலும் மரியாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து 7-6 (-7-4), 6-4 என்ற நேர் செட்களில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றி மூலம் படோசா அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியானது.  இதே பிரிவில் நடந்த மற்றொரு ரவுண்ட் ராபின் லீக் ஆட்டத்தில் அரினா சபலென்கா 2-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை (போலந்து) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தார்.

Related Stories: