பிட்னஸ் நிறுவன முதலீடு விவகாரம்: நடிகை ஷில்பா, கணவர் மீது வழக்கு: மும்பை போலீசார் நடவடிக்கை

மும்பை: பிட்னஸ் நிறுவன முதலீடு விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், மும்பையின் பாந்த்ரா காவல் நிலையத்தில் நிதின் பராய் என்பவர் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, எஸ்எப்எல் பிட்னஸ் நிறுவனத்தின் இயக்குனர் காசிப் கான் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதில், ‘ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் உடற்பயிற்சி மையம் தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்ய கேட்டனர்.

அதில் வரும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறினர். அவர்களது பேச்சை நம்பி அந்த நிறுவனத்தில்  2014ல் சுமார் ரூ.1.51 கோடிக்கு மேல் முதலீடு செய்தேன். ஆனால், லாபத்தில் பங்கு தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.  இதையடுத்து ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, காசிப் கான் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் 406, 409, 420, 506, 34 மற்றும் 120 (பி) பிரிவுகளின் கீழ் பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இந்த புகார் சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. காஷிப்கான்தான் இதனை நடத்தி வந்தார். அவரது பரிவர்த்தனை பற்றி தெரியாது. எஸ்எப்எல் என்ற பிராண்ட் பெயரை பயன்படுத்த மட்டும் அவர் அனுமதி வாங்கியிருந்தார். அவரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெற்றதில்லை என நடிகை ஷில்பா தெரிவித்துள்ளார்.

Related Stories: