×

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது: கார், பைக்குகளிலும் ஏராளமானோர் படையெடுப்பு

சென்னை:  தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சென்னையில் 6 இடங்களிலிருந்து மொத்தம் 9,472 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,08,049 பயணிகளும், பல்வேறு பகுதிகளிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4,960 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,96,000 பயணிகளும் என மொத்தமாக 14,432 பேருந்துகள் வாயிலாக, 7,04,049 பயணிகள் பயணம் செய்தனர்.

பிறகு தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 10,987 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5,49,350 பயணிகளும், பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 3,425 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,71,250 பயணிகளும் என மொத்தமாக 14,412 பேருந்துகள் வாயிலாக, 7,20,600 பயணிகள் பயணம் செய்தனர். மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்தனர். இதேபோல் தினசரி 1400 ஆம்னி பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டது. இதிலும் பலர் பயணித்தனர்.

இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் பெய்யத்தொடங்கிய கனமழை 11ம் தேதி நள்ளிரவு வரை நீடித்தது. இடைவிடாமல் கொட்டிய மழையின் காரணமாக மாநகரில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பெருமளவில் தடைபட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தேவையில்லாமல் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

மேலும் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு திரும்பாமல், அங்கேயே தங்கினர். மழை விட்ட பிறகு அவர்கள் படிப்படியாக சென்னைக்கு திரும்பினர். சனி, ஞாயிறு காரணமாக பலர் 12, 13ம் தேதிகளில் பலர் வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. கடைசிநாளான நேற்று அவர்கள் மீண்டும் சென்னைக்கு படையெடுத்தனர். இதனால் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. முன்னதாகவே பலரும் போக்குவரத்துத்துறையின் இணையதளம், ஆப் மற்றும் தனியார் செயலிகள் மூலமாக முன்பதிவு செய்து இருந்தனர். பலர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்கு வந்தும் பயணித்தனர்.

இதனால் கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் நேற்று மாலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இக்கூட்டமானது நள்ளிரவு வரை நீடித்தது. இவ்வாறு நேற்று மாலையிலும், இரவிலும் புறப்பட்ட பயணிகள் இன்று அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். இங்கிருந்து எம்டிசி பஸ்கள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் பலர் ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கால்டாக்சி போன்றவற்றிலும் பயணித்தனர். இதேபோல் ஆம்னி பேருந்துகள் மூலமாகவும் பலர் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

 ரயில் பயணத்தை விரும்பும் பலர், ரயில்களில் முன்பதிவு செய்து இருந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் வந்து குவிந்தனர். மேலும் பலர் சொந்த கார்களிலும், பைக்குகளிலும் வீடுகளுக்கு சென்று இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்னைக்கு வந்தனர். இதனால் சென்னையை சுற்றி இருக்கும் சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தவாறே பயணித்தன.

* மீண்டும் ‘டிராஃபிக்’
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு பலர் சென்று விட்டதாலும், தொடர் மழை காரணமாகவும் சென்னையில் கடந்த ஒருவாரமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் விரைவாக பயணித்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செயல்பட துவங்கிவிட்டது. இதன்காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் இன்று முதல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

Tags : Chennai , Those who went back to their hometowns returned to Chennai.
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...